×

தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்ப நிலை குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: மருத்துவர்கள் அறிவுறுத்தல்

* நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்
* அரசு மருத்துவமனைகளில் 2 முதல் 10 படுக்கைகள் தயார்

தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பமாகி உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதத்தில் இருந்தே அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதேபோல் இனிவரும் நாட்களில் இன்னும் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்றும் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மனித உடலின் சராசரி வெப்பநிலை 36.1 C (97 F) முதல் 37.2 C (99 F) ஆகும். சுற்றுப்புற வெப்பநிலை சராசரி வெப்பநிலையைவிட அதிகமாகும்போது வியர்வை, தோலுக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லுதல் ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான வெப்பம் வெளியேறி உடல் சராசரி வெப்பநிலையை அடைகிறது. கோடை வெயிலால் அதிக வியர்வை வெளியேறும்போது உப்புச் சத்துப் பற்றாக்குறையும் நீர்ச்சத்துப் பற்றாக்குறையும் ஏற்படுகின்றன.

இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்படலாம். தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கூடுவதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பாக தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்ப அலைகளின் தாக்கம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையும் வீசுவதால் உடல் கடுமையாக பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. வெயிலின் தாக்கத்தை முறையாக கண்டுகொள்ளாமல் விட்டால் மரணம் நேரிடும் வாய்ப்பு கூட உள்ளதென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

வெயிலினால் அதிக பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ள சாலையோர வியாபாரிகள், கட்டிடத் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் சுரங்கத் தொழிலாளர்கள், பேருந்து நடத்துனர் ஓட்டுனர் மற்றும் பயணிகள் விவசாயிகள் இணையதள வாயிலாக உணவு மற்றும் வீட்டுத் தேவை பொருட்கள் விநியோகிப்பவர்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு பணியாளர்கள், போக்குவரத்துக் காவலர்கள், பச்சிளம் குழந்தைகள் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் நோய்வாய் பட்டவர்கள் ஆகியோர் மிக கவனமுடன் இருக்குமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் உடலில் நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், ஓஆர்எஸ் (ORS) பவுடர்களை உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வழங்குவதற்காக ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.
வெயிலின் தாக்கத்தால் திடீரென தற்காலிகமாக சில நிமிடங்களுக்கு ஞாபகம் இழப்பது, நெஞ்சு எரிச்சல், மயக்கம், திடீரென வியர்ப்பது போன்றவை ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. இது ஹீட் ஸ்டிரோக் (வெப்ப பக்கவாதம்) அல்லது மாரடைப்புக்கான அறிகுறிகளாக இருக்கலாம். எனவே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் தமிழக அரசு சார்பில் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை படுக்கைகள் தயாராக உள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவ கல்லூரியில் வெயிலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க 2 முதல் 10 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் ஒருவர் வெயில் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வந்தால் அவர் உடலை முதலில் குளிர்ச்சி அடையவைப்பார்கள் அதற்கான ஐஸ் பாக் (ice bag) அனைத்து மருத்துவமனைகளிலும் தயாராக உள்ளது. இதனை தவிர ஓஆர்எஸ் (ORS) பவுடர்களை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் வெப்பத்தால் யாரும் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை, உயிரிழப்பும் ஏற்படவில்லை. பொது மக்கள் பொது சுகாதாரத்துறை அளிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்களை எவ்வாறு தடுக்கலாம்?
பயணத்தின்போது குடிநீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீர் பருக வேண்டும். சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும் அளவில் தேவையான அளவு நீர் பருக வேண்டும். அதிக அளவில் மோர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக் கஞ்சி, இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு மற்றும் உப்புக் கரைசல் ஆகியவற்றை பருக வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடையை அணிய வேண்டும். திறந்தவெளியில் வேலை செய்யும்போது தலையில் பருத்தித் துண்டு / துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும்.

* வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு முதலுதவி வழங்க வேண்டும்
வெப்பத்தின் தாக்கத்தால் சோர்வடையும் நபரை நிழலின் கீழ் படுக்க வைக்க வேண்டும். ஈரத்துணியால் அவரை துடைத்து கழுவ வேண்டும். சாதாரண வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரை தலையில் ஊற்றலாம். அவருடைய உடல் வெப்பநிலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* கர்ப்பிணி பெண்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்
கர்ப்ப காலத்தில் நீர்ச்சத்து அதிகமாக இருக்க வேண்டும். பனிக்குடத்தில் குழந்தைக்கு தேவையான நீர் இருக்க வேண்டுமென்பதால், கர்ப்பிணிகள் சிரமப்பட்டாவது அடிக்கடி போதிய நீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்ளவேண்டும். அதிக நீர் குடித்து சிறுநீர் கழிக்க வேண்டும், போதிய அளவு சிறுநீர் போகாமல் விட்டாலும் அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படும். வெயிலால் திடீர் மயக்கம் ஏற்படும் என்பதால், வெளியில் சென்றால் தனியாக செல்லக்கூடாது. வெயிலால் வாந்தி, குமட்டல், மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

The post தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்ப நிலை குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: மருத்துவர்கள் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...